பேயோன்

Fictional writer in Osaka, Japan

Visit my website

தமிழில் 15க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் முதல் மற்றும் ஒரே கற்பனைப் பாத்திரம். கதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதும் முழுநேர எழுத்தாளர், பத்தியாளர், ஓவியர். 1967இல் பிறந்த இவர், ஒரு மனைவிக்கும் மகனுக்கும் சொந்தக்காரர். எழுத்துத் துறையில் இருபது ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கிறார்.

இவர் 2009இல் எழுதத் தொடங்கிய 'ஒரு லோட்டா இரத்தம்' என்ற நெடுங்கதையில் வரும் பேயோன் என்ற முக்கியப் பாத்திரத்திற்கு வடிவம் கொடுக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக ட்விட்டரில் செப்டம்பர் 11, 2009இல் பேயோன் (@ThePayon) அறிமுகமானார். இந்த நெடுங்கதை இவரது ஐந்தாம் நூலான 'ஒரு லோட்டா இரத்த'த்தில் இடம்பெற்றுள்ளது.

இவரது முதல் நூலான 'பேயோன் 1000' (2010), தமிழின் முதல் ட்விட்டர் நுண்பதிவுத் தொகுப்பாகும். இரண்டாவது நூலான 'திசை காட்டிப் பறவை' (2010) ஒரு நெடுங்கதை, சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவை அடங்கியது. அடுத்து 2012 ஜனவரியில் வெளியான 'காதல் இரவு', 'பாம்புத் தைலம்' ஆகியவை முறையே கவிதை, உரைநடைத் தொகுப்புகள். 2013 ஜனவரியில் 'நள்ளிரவும் கடலும் நானும்' என்ற கவிதைத் தொகுப்பும் (மின்னூல்) 'ஒரு லோட்டா இரத்தம்' என்ற உரைநடைத் தொகுப்பும் வெளிவந்தன. அச்சு நூல்களை ஆழி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. 2014இல் 'பிரிட்டிஷ் ஏஜெண்ட்', 'சாட்டையடித் தோலுரிப்பில் கிழிந்து தொங்கும் முகமூடிகளும் வாழ்க்கையின் நிதர்சனம் சக்கையாகப் பிழிந்துபோட்ட சுயங்களும்', 'குமார் துப்பறிகிறார்' ஆகிய மின்னூல்கள் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் வெளியாயின. 2016இல் japonaise என்ற ஆங்கில கவிதை மின்னூலை வெளியிட்டார். முழுமையான நூல் பட்டியல் இவர்தம் வலைத்தளத்தில் காணக்கிடைக்கும். இவை தவிர 'புனைவு' என்று ஒரு குறும்படம் எடுத்திருக்கிறார்.

நவம்பர் 2011இல் 'ஓவியத்துவம்' என்ற வெப்காமிக்கைச் சிறிது காலம் நடத்திவந்தார். ஆகஸ்ட் 2012 முதல் ஜனவரி 2013 வரை ஆனந்த விகடன் வார இதழில் 'பேயோன் பக்கம்' என்ற பத்தியை எழுதினார்.

சொந்த ஆண்ட்ராய்டு நிரலான ThePayon, 'சாட்டையடி...' நூலின் ஆண்ட்ராய்டு நிரல் வடிவம் ஆகியவையும் வெளியாகியுள்ளன. 2016இல் 'பறந்து செல்ல வா' என்ற தமிழ்த் திரைப்படத்திற்குத் திரைக்கதையின் உபஆசிரியராகவும் வசன எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.